மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழிகளுமாக மாறி மழைநீர் தேங்கி நிற்பதால் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக மாறி உள்ளது.
மார்த்தாண்டம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு விரிவுப்படுத்தப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டட பாகங்கள் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. மேம்பால பணிகள் நிறைவு அடைந்த பின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிவடைந்தது. ஒரு சில பகுதிகளில் ஏற்கெனவே இருக்கும் கட்டட பாகங்களை உரசியபடியும், ஒரு சிலருக்காக மேம்பாலம் வளைந்தும், நெளிந்தும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேம்பால பணிகள் நிறைவடைந்த உடன் கீழ்பகுதியில் உள்ள சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை தார் போட்டு சீரமைக்கப்பட்டது. வாகன போக்குவரத்து துவங்கிய ஓரிரு மாதங்களில் அந்த ரோடு ஆங்காங்கே சேதம் அடைய துவங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரோடு பணி தரமானதாக நடந்துள்ளதா அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்தார்களா என்ற கேள்விளை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர். அத்துடன் அவ்வழியாக போடப்பட்டுள்ள குடிநீர்குழாய்களில் ஏற்படுகின்ற உடைப்புகளை சரிசெய்ய தோண்டப்படுகின்ற பள்ளங்களாலும் ரோடு எளிதில் சேதம் அடைந்து வருகிறது.
வெட்டுவெந்நி ஜங்ஷன் முதல் மார்த்தாண்டம் ஜங்ஷன் வரை பல இடங்களில் சிறு, சிறு பள்ளங்கள் தோன்றி தற்போது அவை மெகாசைஸ் மரண குழிகளாக காட்சி அளிக்கின்றன. தற்போது மழை பெய்துவரும் சூழலில் இந்த குழிகளில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. இந்த குழிகளில் சிக்கி பைக்குகளில் செல்பவர்கள் விழுந்து படுகாயங்களுடன் எழுந்து செல்லும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறைக்கும், குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கும் பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர். எனவே, இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்து இதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
Tags:
District News
Plz take action soon...
ReplyDelete