குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஸ்ரீநாத் பதவி ஏற்றார்

குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த துரை, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை சி.பி.சி.ஐ.டி.யில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீநாத், குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இவர் குமரி மாவட்டத்தின் 50–வது போலீஸ் சூப்பிரண்டு ஆவார்.
போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்தவர். 2013–ம் ஆண்டில் ஐ.பி.எஸ். முடித்து திருநெல்வேலியில் பயிற்சி பெற்றார். பின்னர் 2015–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். அதன்பிறகு சென்னை சி.பி.சி.ஐ.டி.யில் போலீஸ் சூப்பிரண்டாக 6 மாதம் பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது குமரி மாவட்டத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுவது இவருக்கு இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஸ்ரீநாத் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து பதவி ஏற்று கொண்டார். பொறுப்புகளை பழைய போலீஸ் சூப்பிரண்டு துரை, புதிய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்நேரமும் என்னை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்‘ என்றார்.

புதிய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும், ஏற்கனவே போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய துரையும் டெல்லியில் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous News Next News