நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால், பொதுமக்கள் அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் (08-11-2017) ஓர் ஆண்டு நிறைவடைந்தது. இதையொட்டி நேற்று, கருப்பு தினமாக கடைப்பிடித்து எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுபோல், குமரி மாவட்டத்திலும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.
குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்துக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற சிலர் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கருப்பு சேலை அணிந்து தலையில் முக்காடு போட்டிருந்தனர். மேலும், தங்கள் நெற்றியில் நாமமும் இட்டு இருந்தனர்.
தங்கள் கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர். பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டிக்கும் விதத்தில் கோவிந்தா, கோவிந்தா என்று அவர்கள் கோஷமும் எழுப்பினார்கள். நூதன போராட்டத்தில் குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுமன், கிள்ளியூர் தொகுதி தலைவர் ராஜேஷ், பத்மநாபபுரம் தொகுதி தலைவர் ராபர்ட், நிர்வாகிகள் ஆனந்த், கார்ல்மார்க்ஸ் ஜோசப், ராபர்ட் கிளைவ் மற்றும் ஏராளமான இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், இந்த போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும், குளச்சல் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால், அதற்குள் இளைஞர் காங்கிரசார் தங்கள் போராட்டத்தை நிறைவு செய்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.
Tags:
Surrounded Area