குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் லாசர். அவருடைய மகன் ஆன்டணி ஜெயின் (வயது 22). கேட்டரிங் படித்து விட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கோவளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று ஆன்டணி ஜெயினும், அவருடைய நண்பரான முள்ளூர்துறையை சேர்ந்த என்ஜினீயர் ஜெய்சனும் (வயது 22) நாகர்கோவிலில் இருந்து குளச்சலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆன்டணி ஜெயின் ஓட்டினார்.
அவர்கள் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கூட்டுமங்கலம் பகுதியில் சென்ற போது, முன்னால் சென்ற பஸ்சை முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வருவதை கண்ட ஆன்டணி ஜெயின் திடீரென பிரேக் பிடித்தார். இதில் நிலை தடுமாறிய இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அதே சமயத்தில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த செக்காரவிளையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மரியதாசும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.
இந்த விபத்தில் ஆன்டணி ஜெயின் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ஜெய்சன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும், முன்னாள் கவுன்சிலர் மரியதாஸ் சிகிச்சைக்காக குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:
Manavai News