கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகில் உள்ள வெள்ளமோடியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நெல்லை மாவட்டம் ஆய்குடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் சிவராமன் (வயது 17) முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருடைய நண்பர் முகேஷ் கண்ணன். தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர், அதே கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. எனவே விடுமுறையை கொண்டாட நண்பர்கள் இருவர் உள்பட 12 மாணவர்கள் முட்டம் கடற்கரைக்கு சென்றனர்.
கடல் அழகை அவர்கள் ரசித்து கொண்டிருந்தனர். பின்னர் அனைவரும் குளிப்பதற்காக கடலில் இறங்கினர். கடலில் அவர்கள் விளையாடி உற்சாகமாக குளித்தனர். அப்போது திடீரென்று எழுந்து வந்த ராட்சத அலை, நண்பர்களான சிவராமனையும், முகேஷ் கண்ணனையும் இழுத்து சென்றது. உடனே அவர்கள் அபயகுரல் எழுப்பி, உயிருக்கு போராடினார்கள். இதை கண்ட சக மாணவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் முகேஷ்கண்ணனை மட்டும் அவர்களால் மீட்க முடிந்தது. ஆனால் சிவராமனை ராட்சத அலை இழுத்து சென்று விட்டது.
உடனே இதுபற்றி குளச்சல் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அலையில் இருந்து மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த முகேஷ்கண்ணனை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விடுமுறையை கொண்டாட சென்ற போது ராட்சத அலை சிவராமனை இழுத்து சென்ற சம்பவம் மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Tags:
Surrounded Area