கடல் சீற்றம் ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்தது; 8 வீடுகள் சேதம்

ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக குமரி மேற்குகடற்கரை பகுதியில் கடற்சீற்றம் ஏற்படுவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் கடலில் ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, அதையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் கொல்லங்கோடு பகுதியில் கடல்நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்தன. அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள அலைதடுப்பு சுவர் தற்போது சேதமடைந்து உள்ளதால், ராட்சத அலைகள் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதில் முத்தப்பன், ஆன்டனி, பிராளன், ஆரோக்கியம், அந்தோணி, மேரிதாசன், அருள்தாசன், சவேரியார் ஆகியோரின் 8 வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் அந்த பகுதி மக்கள் விடிய– விடிய தூங்காமல், அச்சத்துடன் இருந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். நேற்று காலையிலும் அந்த பகுதியில் கடல் சீற்றம் நீடித்தது. இதனால் கட்டுமர மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. மேற்கு கடற்கரை பகுதியில் ஏற்கனவே மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கடந்த 1–ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. தற்போது, கடல் சீற்றத்தால் கட்டுமர மீனவர்களும் கடலுக்கு செல்லாததால் சந்தைகளில் மீன்வரத்து மிகவும் குறைந்துள்ளது.

வள்ளவிளை பகுதியில் ஏற்படும் கடற்சீற்றத்தால் அந்த பகுதி மக்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருவதால், சேதமடைந்துள்ள அலைதடுப்புசுவரை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று காலையிலும் கடலில் சீற்றம் பயங்கரமாக இருந்தது. கடலில் தோன்றிய ராட்சத அலைகள், தடுப்பு சுவரையும் தாண்டி பல அடி உயரத்திற்கு எழுந்து வந்தன. இது போல் துறைமுக பாலத்தின் மீதும், பாலத்தை மூழ்கடிக்கும் வண்ணம் அலைகள் சீறி எழுந்தன. இதனால் நேற்று அதிகாலை குறைந்த அளவு கட்டுமர மீனவர்களே கடலுக்கு சென்றனர். அவர்களுக்கு சிறிதளவு மீன்களே கிடைத்தன.

குமரி மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கடல் பகுதியில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகள் எதுவும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மாவட்டத்தின் அனைத்து மீன் பிடி சந்தைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

குளச்சல், கோடிமுனை, குறும்பனை பகுதிகளில் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் சென்று மீன்பிடித்து வருவோரிடம் மீன்களை பெண்கள் வாங்கி உள்நாட்டு மீன் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள். இந்த பெண்கள் நேற்று அதிகாலையிலேயே குளச்சல் மீன் சந்தையில் குவிந்திருந்தனர். ஆனால் கடல் சீற்றம் காரணமாக நேற்று போதிய மீன்கள் கிடைக்காததால் மீன் வாங்க வந்த பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கன்னியாகுமரியிலும் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. அப்போது, காற்று வேகமாக அடித்ததால் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக கரையை நோக்கி வந்த வண்ணம் இருந்தன. மேலும், ராட்சத அலைகள் எழுந்து பாறைகளில் மோதி சிதறின. அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கடலில் இறங்காமல் நின்றனர்.

அத்துடன் போலீசார் கரையோர பகுதியில் ரோந்து சென்று சுற்றுலா பயணிகளை எச்சரித்த வண்ணம் இருந்தனர்.

Post a Comment

Previous News Next News