மண்டைக்காடு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

மண்டைக்காடு அருகே காட்டுவிளையில் நேற்றுமுன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் டாஸ்மாக் கடை அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை.
அதைத்தொடர்ந்து கடை முன் நேற்று காலை 10 மணி அளவில் பொது மக்கள் திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதற்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், மண்டைக்காடு பேரூர் காங்கிரஸ் தலைவர் சுந்தர், பா.ஜனதா கட்சி மண்டல் தலைவர் ஜெகன்சந்திரகுமார் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், முத்துராமன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி துணை சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பதில் பொது மக்கள் உறுதியாக இருந்தனர். டாஸ்மாக் கடை மூடப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி கூறினார்கள். அதைத்தொடர்ந்து பகல் 1 மணி வரை நடந்த முற்றுகை போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Post a Comment

Previous News Next News