குளச்சல் கடலில் அதிநவீன மிதவை பந்து நிறுத்தப்பட்டது: கடல் சீற்றம் பற்றி முன்கூட்டியே தகவல் அறியலாம்

குமரி மாவட்டத்தில் கடலில் அடிக்கடி சீற்றம் ஏற்படுகிறது. இதனால் மீனவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில் கடல் சீற்றம் பற்றி முன்கூட்டியே மீனவர்கள் அறிந்து கொள்ள வசதியாக குளச்சல் மீன்பிடி துறைமுக கடலில் அதிநவீன மிதவை பந்து நிறுவப்பட்டது.
அந்த மிதவை பந்தை விசைப்படகில் ஏற்றிக் கொண்டு சென்று கடலில் நிலை நிறுத்தினார்கள். மிதவை பந்து குறித்து கன்னியாகுமரியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மேலாளர் முபாரக் கூறியதாவது:-

குளச்சல் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள மிதவை பந்து கடலில் இருந்து எழும்பி வரும் அலையின் வேகம், அதன் உயரம் மற்றும் அது வரும் திசை ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடும். இந்த தகவல் செயற்கைகோள் மூலம் ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் பதிவாகும். அவர்கள் கடல் அலை குறித்து கணக்கிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்துக்கு தெரிவிப்பார்கள்.

அந்த தகவலை நாங்கள் பெற்று கடல் சீற்றம் குறித்த விவரங்களை மீனவர்களின் செல்போன்களுக்கு ஒலி வடிவ குறுந்தகவலாக அனுப்புவோம். மேலும் பங்குத்தந்தைகள், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிப்போம். இதன் மூலம் கடல் சீற்றம் பற்றி மீனவர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous News Next News