குமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயம் கடற்கரை பகுதியில் மத்திய அரசு சார்பில் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தக துறைமுகம் அமைய உள்ளது. இதையடுத்து இந்த திட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. குறிப்பாக கடற்கரை வாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கும் என்ற கோரிக்கையுடன் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதுடன், பல்வேறு தொடர் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இனயத்தில் மத்திய அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது வர்த்தக துறைமுகம் அல்ல, சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் எனவும், ஆகவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகளை சென்று பார்வையிட்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து இணைச்செயலாளர் பரூன் மித்ரா நேற்று இனயம் பகுதிக்கு வந்தார். அவருடன் குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், மனோ தங்கராஜ், பிரின்ஸ் ஆகியோரும் வந்திருந்தனர். அவர் வர்த்தக துறைமுகம் அமைய உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தார். இனயம், ஹெலன் நகர் வரையிலான அனைத்து பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இதையொட்டி கிள்ளியூரில் உள்ள இனயம் வர்த்தக துறைமுக அலுவலகத்தில் வைத்து இந்த துறைமுகத்தால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு தலைவர் ஸ்டீபன், தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு தலைவர் சர்ச்சில், தமிழ்நாடு மீனவர் பேரவையின் குமரி மாவட்ட தலைவர் ஜோர்தான், செயலாளர் கென்னடி, தேசிய மீனவர் பேரவை தலைவர் ஜார்ஜ் ராபின்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இனயத்தில் துறைமுகம் அமைவதால் சுற்று வட்டார கடற்கரை கிராமங்கள் பாதிக்கப்படும் எனவும், துறைமுகத்தின் மேற்கு பகுதி கிராமங்கள் மற்றும் ரூ.202 கோடி மதிப்பில் உருவான தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் போன்றவை கடல் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும், குளச்சல் துறைமுகம் மண் போன்றவை கடல் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாலும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். மட்டுமின்றி கரை வாழ்பகுதி மக்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அதிகாரி பரூன் மித்ரா, பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலீப்பதாகவும், துறைமுகம் மாற்று பகுதியில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். சுமார் இரண்டு மணி நேர கலந்தாய்வு கூட்டத்துக்கு பிறகு அவர் பொதுமக்கள் பாதிப்படையும் என கூறிய கடற்கரை பகுதிகளையும் பார்வையிட சென்றார்.
மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை செயலாளர் பரூன்மித்ரா வருகையை முன்னிட்டு நேற்று கடற்கரை பகுதிகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:
Surrounded Area