குமரி மாவட்டத்தில், ஆதார் எண் இணைக்காத 29,760 ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டன.
குமரி மாவட்டத்தில் ஆதார் அட்டை பெற்றவர்கள் தங்களது ஆதார் எண்ணை ரேஷன் கார்டுகளில் இணைக்கும் பணி அந்தந்த ரேஷன் கடைகளில் நடந்து வந்தது. இதற்காக ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர். இருப்பினும் மாவட்டம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் ஆதார் எண்ணை பெற்றும் அதை ரேஷன் கடைகளில் பதிவு செய்யாமல் இருந்தனர்.
இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்காத ரேஷன் கார்டுகள் திடீரென தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. அதன்படி அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 9,643 ரேஷன் கார்டுகளும், தோவாளை தாலுகாவில் 2,215 ரேஷன் கார்டுகளும், கல்குளம் தாலுகாவில் 6,434 ரேஷன் கார்டுகளும், விளவங்கோடு தாலுகாவில் 11,468 ரேஷன் கார்டுகளும் என மாவட்டம் முழுவதும் 29,760 ரேஷன் கார்டுகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி கோலப்பன் கூறியதாவது:–
ஆதார் எண் பெற்றவர்கள் ரேஷன் கடைகளில் பதிவு செய்யும்படி பலமுறை அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பலர் தங்களது ஆதார் எண்ணை இணைக்கவில்லை. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் சுமார் 90 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் 68 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை ரேஷன் கடையில் இணைத்துள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த யாருமே ஆதார் எண்ணை இணைக்காத ரேஷன் கார்டுகள் மற்றும் 3 மாதங்களுக்கும் மேல் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள், போலி ரேஷன் கார்டுகள் என அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மட்டும் 9 ஆயிரத்து 643 ரேஷன் கார்டுகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது ஆதார் எண், உரிய ஆவணங்கள், ஆதார் எண் இணைக்காததற்கான சரியான காரணங்களை தெரிவித்த பின்னர் நீக்கப்பட்டிருந்த ரேஷன் கார்டுகளை மீண்டும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆதார் எண் இணைக்காத 29,760 ரேஷன் கார்டுகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
திடீரென ரேஷன் கார்டுகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் ஆதார் எண், உரிய ஆவணங்களுடன், தங்களது ரேஷன் கார்டுகளுக்கு ஆதார் எண் இணைக்காததற்கான காரணத்தை விளக்கி வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுபோல மற்ற வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.
Tags:
District News