குளச்சலில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய கடற்படை வீரர்கள் 2 பேர் சிறைபிடிப்பு

இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக நேற்று முன்தினம் குளச்சலில் பேரணி, மனித சங்கிலி போன்ற போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், நேற்று குளச்சல் கடற்கரை கிராமங்களில் ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சுற்றி வந்தது. அந்த ஹெலிகாப்டர் குளச்சல் வாணியக்குடி மீனவ கிராமத்தில் கடற்கரை மணற்பரப்பில் திடீரென தரையிறங்கியது. அதில் இருந்து இரண்டு பேர் சர்வே எடுப்பதற்காக பொருட்களுடன் இறங்கினர். அவர்கள் இறங்கியதும் அந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதை பார்த்த பொதுமக்கள், அவர்கள் இருவரும் இனயம் வர்த்தக துறைமுக பணிக்காக சர்வே எடுக்க வந்துள்ளதாக நினைத்து சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறைபிடிக்கப்பட்ட 2 பேரையும் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவர்களிடம் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கட்ராமன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் பிள்ளை ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் கடற்படை வீரர்கள் என்பதும், கடல் பகுதியை ஆய்வு செய்வதற்காக வந்ததும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் வந்த கப்பல் கன்னியாகுமரியில் நிற்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து, இரண்டு வீரர்களும் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Post a Comment

Previous News Next News