கத்தாரில் மீன் பிடித்தபோது கடலில் தவறி விழுந்த மீனவரின் கதி என்ன? உறவினர்கள் சோகம்

கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் 6–வது அன்பிய தெருவைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 25), மீன்பிடி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் முதல் கத்தார் நாட்டில் உள்ள ரெயால் என்ற இடத்தில் தங்கியிருந்து மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வந்தார்.

அந்த பகுதியைச் சேர்ந்த செய்யது அல்ஹாபி என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மூலம் நேற்றுமுன்தினம் இரவு சந்தியா கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். அந்த படகை குளச்சலைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டினார். அவருடன் மேலும் சில மீனவர்களும் சென்றனர்.

நள்ளிரவில் நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் போடப்பட்டு இருந்த வலையை படகுக்குள் இழுத்தபோது வலையில் இருந்த கயிறு சந்தியாவின் காலில் சுற்றியது. இதனால் அவர் படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார். இதைப்பார்த்ததும் மற்ற மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் அவர்களால் சந்தியாவை மீட்க முடியவில்லை. இதனால் அந்த மீனவர்கள் கரை திரும்பி படகு உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தைதெரிவித்தனர்.

மேலும் ஆரோக்கியபுரத்தில் உள்ள சந்தியாவின் குடும்பத்தினருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து சந்தியாவின் கதி என்ன? என அறிய நடவடிக்கை எடுக்கும்படி கூறி உள்ளனர். மீன் பிடித்தபோது குமரி மீனவர் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த சம்பவம் அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Post a Comment

Previous News Next News