மணவாளக்குறிச்சி அருகே கடற்கரையில் பிணமாக கிடந்த மீனவர் போலீசார் விசாரணை

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் கடற்கரையில் பிணமாக கிடந்த மீனவரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல் துறைமுகம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஆன்டனி (வயது 40), மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி சுலோசனா ராணி (38). இவரது அக்கா வீடு குளச்சல் அருகே கடியப்பட்டணத்தில் உள்ளது. கடந்த 9–ம் தேதி ஜோசப் ஆன்டனி தனது குடும்பத்தினருடன் கடியப்பட்டணத்தில் உள்ள சுலோசனாவின் அக்கா வீட்டுக்கு சென்றார். அன்று இரவு 12 மணியளவில் ஜோசப் ஆன்டனி இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

பின்னர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடினர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், நேற்று காலை கடியப்பட்டணம் கடற்கரையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதை அந்த பகுதி மீனவர்கள் பார்த்தனர். இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்–இன்ஸ்பெக்டர் ஜான் கிங்சிலி கிறிஸ்டோபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பிணமாக கிடந்தது ஜோசப் ஆன்டனி என்பது தெரிய வந்தது.

அவர் கடற்கரையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது அலையில் சிக்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருகிறார்கள். அவரது உடலை கைப்பற்றி குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீனவர் சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

Previous News Next News