மாதவலாயம் ஊராட்சியில் தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்ததை கண்டித்து உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சியானது லாயம், புளியன்விளை, சோழபுரம், கண்ணன்புதூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 55 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ளனர். 7 சதவீதம் தாழ்த்தப்பட்டோரும், குறிப்பிட்ட சதவீதம் இதர பிரிவினரும் உள்ளனர். மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் 5 வார்டுகள் மாதவலாயம் பகுதியில் உள்ளது. இந்நிலையில் கடந்த தேர்தல் வரை மாதவலாயம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பொது வேட்பாளர்களே நிறுத்தப்பட்டு வந்தனர்.
தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான கருத்தை தெரிவித்த காட்சி |
இந்நிலையில் கடந்த சில மாதமாக உள்ளாட்சி தேர்தலில் மாதவலாயம் ஊராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட போவதாக தகவல் பரவியது. இதையடுத்து மாதவலாயம் ஊர் மக்கள் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்திற்கும், மாவட்ட கலெக்டருக்கும் மாதவலாயம் ஊராட்சி தலைவர் பதவி தொடர்ந்து பொதுவாகவே இருக்க வேண்டும் என மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் ஊராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் 5,6,7,8,9 ஆகிய 5 வார்டு உறுப்பினர் தேர்தல், ஊராட்சி தலைவர் தேர்தல், ஒன்றிய கவுன்சிலர் பதவி, மாவட்ட கவுன்சிலர் தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதியில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு தரப்பினர் தங்கள் வழிபாட்டு தலம் முன்பு திரண்டு எதிர்ப்பை தெரிவித்தனர். 1 மணி நேரத்திற்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:
District News