மணவாளக்குறிச்சியில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ வீரர் கைது
மணவாளக்குறிச்சி அருகே தருவை பகுதியைச் சேர்ந்தவர் மதன். ராணுவ வீரர். இவருடைய மனைவி அனிதா. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கணவர் மதனுடன் அனிதா (பழைய படம்) |
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனையில் இருந்த அனிதா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அனிதாவின் சகோதரி கவிதா, மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சகோதரி அனிதாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறி இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அனிதாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் விசாரணை நடத்தினார். அனிதாவின் உறவினர்களிடமும், கணவர் மதனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், வரதட்சணை கொடுமை காரணமாக அனிதாவை மதன் தற்கொலைக்கு தூண்டியது தெரிய வந்தது. இதையடுத்து அனிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக மதன் மீது மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:
Manavai News