ஓடும் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து காரில் விழுந்தது அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர் தப்பினார்

ஓடும் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து காரில் விழுந்தது அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர் தப்பினார்
19-02-2016
குமரி மாவட்டத்தில் அடிக்கடி அரசு பஸ்கள் பழுதாகி நிற்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பின்னர் அந்த பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் வேறு பஸ்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலையில் புதுக்கடையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் இருந்தனர்.
வில்லுக்குறி அருகே உள்ள தோட்டியோடு பகுதியில் பஸ் வந்த போது, திடீரென பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக முளகுமூட்டை சேர்ந்த பரத் (வயது 40) என்பவர் காரில் நாகர்கோவிலில் இருந்து முளகுமூடு நோக்கி சென்று கொண்டிருந்தார். பஸ்சில் இருந்து பெயர்ந்து விழுந்த மேற்கூரை பரத் சென்ற கார் மீது விழுந்தது. இதில் அந்த காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. ஆனால் பரத் காயமின்றி தப்பினார்.

மேற்கூரை பெயர்ந்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர்.உடனே டிரைவர் ரோட்டோரமாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கி அந்த வழியாக வந்த வேறு பஸ்களில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடக்கும்போது அப்பகுதியில் இரு சக்கர வாகனங்கள் எதுவும் வரவில்லை. வந்து இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். ஓடும் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் வந்து பஸ்சை பார்த்தனர். இதுபோன்று பழைய பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Post a Comment

Previous News Next News