மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா: ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்
03-09-2015
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டுக்கான ஆவணி அஸ்வதி பொங்கல் விழா கடந்த 1-ம் தேதி தொடங்கியது. அன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், மாலையில் சுமங்கலி பூஜை ஆகியவை நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
நேற்று காலையில் நடை திறக்கப்பட்டு அபிஷேகமும், தீபாராதனையும், பக்திகான சுதாவும், நாதஸ்வர கச்சேரியும், ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவும் நடைபெற்றது. இதனையொட்டி லட்சுமிபுரம் செல்லும் ரோடு, சாஸ்தா கோவில் செல்லும் ரோடு, மணலிவிளை செல்லும் ரோடு, கடற்கரை செல்லும் ரோடு, கோவில் எதிரே உள்ள பொங்கல் இடும் இடம் ஆகியவற்றில் திரளான பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.
இதில் மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி முருகேசன், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதியம் அன்னதானம், சிறப்பு தீபாராதனை, மாலையில் தீபாராதனை, இரவில் பஜனை, அத்தாள பூஜை ஆகியவை நடந்தது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்