மாதவலாயத்தில் கேபிள் டி.வி. ஊழியர் படுகொலை: கொலையாளி போலீசில் சரண்

மாதவலாயத்தில் கேபிள் டி.வி. ஊழியர் படுகொலை: 
கொலையாளி போலீசில் சரண்
05-04-2015
நாகர்கோவில் அருகே உள்ள மாதவலாயத்தில், எதிர்வீட்டுக்கு மனைவி அடிக்கடி சென்றதால் சந்தேகம் அடைந்த கணவர், எதிர்வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குமரி மாவட்டம், மாதவலாயம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் (வயது 41). இவருடைய மனைவி பீமா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அபுபக்கர் அந்த பகுதியில் கேபிள் டி.வி. இணைப்புக்கு மாதா மாதம் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். இவரது எதிர் வீட்டைச் சேர்ந்தவர் மகபூப் (45). இவருடைய மனைவி கஜிஜா பீவி. இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் எதிர்வீடான அபுபக்கர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. இதனால் இவருக்கும், அபுபக்கருக்கும் இடையே தொடர்பு இருக்கலாமோ? என கஜிஜாபீவியின் கணவர் மகபூப் சந்தேகப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் தன் மனைவியை கண்டித்தார். எதிர்வீட்டுக்கு செல்லக் கூடாது என்றும், அபுபக்கரிடம் பேசக்கூடாது என்றும் தடை விதித்தார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இரு வருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் விழித்த அபுபக்கர் கதவை திறந்துகொண்டு சிறுநீர் கழிக்க வெளியே வந்தார். அந்த நேரத்தில் மகபூப் கத்தியுடன் பாய்ந்து அபுபக்கரை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் அபுபக்கர் வீட்டின் அருகே நின்ற சைக்கிள் மீது விழுந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த கொலையைத் தொடர்ந்து மகபூப் ரத்தம் தோய்ந்த கத்தியுடன், சைக்கிளில் ஏறி ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அங்கிருந்த போலீசார் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே உயரதிகாரி களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நாகர் கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன், ஆரல்வாய்மொழி இன்ஸ் பெக்டர் தர்மராஜ், சப்-இன்ஸ் பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணம், பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியா குமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை குறித்து அபுபக்கரின் மனைவி பீமா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை யின் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. அதிகாலையில் நடந்த இந்த கொலைச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

Previous News Next News