குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி ஆராதனை: சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது
04-04-2015
புனித வெள்ளியையொட்டி குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று திருச்சிலுவை ஆராதனை, மும்மணி பிரார்த்தனை, சிலுவைப்பாடு போன்றவை நடந்தன.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த ஆண்டு புனித வெள்ளி நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கத்தோலிக்க தேவாலயங்களில் வார்த்தை வழிபாடு நிகழ்ச்சி காலையில் தொடங்கியது. அப்போது அருட்பணியாளர்கள், இயேசுவின் சிலுவைப்பாட்டு வசனங்களை சொல்லி மன்றாட்டு நடத்தினர். அதைத்தொடர்ந்து திருச்சிலுவை வழிபாடு நடைபெற்றது.
இந்த வழிபாட்டின் முடிவில் பக்தர்கள் திருச்சிலுவையை முத்தமிட்டு காணிக்கை வழங்கினர். மேலும் புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையைச் சுமந்து சென்றபோது நிகழ்ந்த நிகழ்வுகளை 14 காட்சிகளாக வைத்து இந்த சிலுவைப்பாதை நடைபெற்றது. சில ஆலயங்களில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாதை ஊர்வலம் தத்ரூபமாக சித்தரித்து காண்பிக்கப்பட்டது.
கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்திலும், குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயத்திலும் வழிபாடு நடந்தது. இந்த வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியைத் தொடர்ந்து இயேசுவின் திருஉடலை பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக எடுத்துச்செல்வது போன்ற காட்சி சித்தரித்து காண்பிக்கப்பட்டது. இதில் துணை பங்குத்தந்தை சகாயபெலிக்ஸ் தலைமையில் ஊர்த்தலைவர் ஜெயராஜ், செயலாளர் ஜோஸ், பொருளாளர் ராஜன் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
குமரி மாவட்ட சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இயேசு கிறிஸ்துவின் 7 செய்திகளை சொல்லி மும்மணி பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனை முடிந்ததும் சில ஆலயங்களில் கஞ்சி காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கினர். குமரி சி.எஸ்.ஐ. பேராய பிஷப் ஜி.தேவகடாட்சம் நாகர்கோவில் கஸ்பா சபையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 7 வசனங்களை சொல்லி பிரார்த்தனை நடத்தினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
புனித வெள்ளியைத் தொடர்ந்து உயிர்ப்பு விழாவான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கத்தோலிக்க ஆலயங்களில் இன்று நள்ளிரவிலும், சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நாளை அதிகாலையிலும் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்