மணவாளக்குறிச்சி அருகே வாகனம் மோதி மீனவர் பலி
31-03-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் சவேரியார் தெருவை சேர்ந்தவர் ஜேசையா (வயது 58), மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அம்மாண்டிவிளையில் உள்ள கடைக்கு சென்று விட்டு, முட்டம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜேசையா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உறவினர்கள் ஓடி சென்று ஜேசையாவை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஜேசையா இறந்து விட்டார் என்று கூறினார்கள்.
இதுகுறித்து ஜேசையா மனைவி புஷ்பா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேசையா மீது மோதிய வாகனம் எது? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்