குமரி மாவட்டத்தில் 761 பேருக்கு ரூ.3 கோடி திருமண நிதி, 3 கிலோ தங்கம்: கலெக்டர் - எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

குமரி மாவட்டத்தில் 761 பேருக்கு ரூ.3 கோடி திருமண நிதி, 3 கிலோ தங்கம்: கலெக்டர் - எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்
17-12-2014
தமிழகத்தில் 10–ம் வகுப்பு படித்த ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டம் உள்ளிட்ட அனைத்து திருமணத் திட்டங்களிலும் நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் மற்றும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும், பட்டயக்கல்வி மற்றும் பட்டப்படிப்பு படித்த மணப்பெண்ணுக்கு திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் மற்றும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

அதன்படி 2013– 2014–ம் நிதியாண்டில் முதல் கட்டமாக 6146 பயனாளிகளுக்கு ரூ.22 கோடியே 50 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவியும், திருமாங்கல்யத்துக்கு 24 கிலோ 584 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. 2014– 2015–ம் நிதியாண்டில் முதல் கட்டமாக 192 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவியும், திருமாங்கல்யத்துக்கு 768 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2–வது கட்டமாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், எம்.எல்.ஏ.க்கள் கே.டி.பச்சைமால், நாஞ்சில் முருகேசன் ஆகியோர் பட்டதாரி கல்வித் தகுதியுடைய 434 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியுடன், தலா 4 கிராம் தங்கமும், பட்டதாரி அல்லாத கல்வித்தகுதியுடைய 327 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவியுடன் தலா 4 கிராம் தங்கமும் வழங்கினர். மொத்தம் 761 பேருக்கு ரூ.2 கோடியே 98 லட்சத்து 75 ஆயிரம் நிதியும், திருமாங்கல்யத்துக்கு 3 கிலோ 44 கிராம் எடையுள்ள தங்கமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், சமூகநலத்துறை அதிகாரி பாண்டியம்மாள், அகஸ்தீஸ்வரம் தலைமையிடத்து தனித்துணை தாசில்தார் கண்ணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பள்ளவிளை ராஜேஷ், ஹேமந்த்குமார், ஞாலம் ஜெகதீஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News