மணவாளக்குறிச்சி அருகே நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் சாவு
16-11-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கீழ முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 37), மீனவர். இவர் ஜான்சன் (35), சிலுவைபிள்ளை (60) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை 2 மணி அளவில் 3 பேரும், முட்டத்தில் இருந்து 8 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில், நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது பலத்த இடி–மின்னலுடன் மழை கொட்டியது.
இதனால் 3 பேரும் பைபர் படகில் கரை திரும்ப முயன்றனர். அப்போது பயங்கர இடியுடன், மின்னல் தாக்கியது. இதில் ஜோஸ் உடல் கருகி படகிலேயே இறந்து விழுந்தார். இதை பார்த்த ஜான்சனும், சிலுவை பிள்ளையும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் படகை வேகமாக இயக்கி கரைக்கு திரும்பினார்கள்.
மின்னல் தாக்கி பலியான ஜோசுக்கு மேரி நிர்மலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஜோசின் உடலை பார்த்து அவர் மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்மீனவர் மின்னல் தாக்கி பலியான தகவல் அறிந்ததும், கடற்கரையில் மீனவர்கள் திரண்டனர்.
உடனே சம்பவ இடத்துக்கு கடலோர காவல்படை போலீசார் விரைந்து வந்து, ஜோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்