குளச்சலில் வர்த்தக துறைமுகம், நாகர்கோவிலில் மேம்பாலங்கள் கட்டுவதற்கான ஆய்வுக்கு நிதின் கட்காரி உத்தரவு : மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

குளச்சலில் வர்த்தக துறைமுகம், நாகர்கோவிலில் மேம்பாலங்கள் கட்டுவதற்கான ஆய்வுக்கு நிதின் கட்காரி உத்தரவு : மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
06-11-2014
குளச்சலில் வர்த்தக துறைமுகம், நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் மேம்பாலங்கள் கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி உத்தரவிட்டு இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1999-2004-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது குமரி மாவட்டம் குளச்சலில் வர்த்தக துறைமுகம் கொண்டு வருவதற்காக நான் மேற்கொண்ட முயற்சியால், கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசும், மலேசிய நிறுவனமும், இணைந்து குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைப்பதற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால் 2004-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு பதவி ஏற்றவுடன் குளச்சல் வர்த்தகத் துறைமுக திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது பா.ஜனதா பொறுப்பேற்றவுடன் குளச்சல் துறைமுகப் பணியை உடனே தொடங்குவதற்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து வேண்டுகோள் விடுத்தேன். இதன் பயனாக கடந்த 3-ம் தேதி சென்னையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, குமரி மாவட்டம் குளச்சலில் உள்ள இயற்கை துறைமுகத்தை தமிழக அரசு ஒத்துழைப்புடன் வர்த்தக துறைமுகமாக மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் குமரி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளாக சாலைகள் சரிவர செப்பனிடப்படாமல் இருந்ததால் அனைத்து சாலைகளும் உருக்குலைந்து, தற்போது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் அவசியம் என கருதப்படுகிறது. எனவே, கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து ஈத்தாமொழி ரோடு சந்திப்பு வரை, சவேரியார் பேராலய சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் சந்திப்பு வரை, பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டவும், ஒழுகினசேரியில் கூடுதலாக ஒரு பாலம் அமைத்து சாலையை அகலப்படுத்தவும், சுசீந்திரம் பாலத்தின் அருகே மேலும் கூடுதலாக ஒரு பாலம் அமைத்து பாலத்தின் நான்கு முனைகளில் உள்ள வளைவுகளை அகலப்படுத்தவும் மந்திரி நிதின் கட்காரியிடம் கேட்டேன். 

அதன் அடிப்படையில் அவர், துறை அதிகாரிகளிடம் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்த மேம்பாலங்கள் செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டுக்குள் வரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous News Next News