மண்டைக்காடு அருகே மீனவர் வீட்டில் தங்க கட்டிகள் பதுக்கலா?
05-10-2014
மண்டைக்காடு போலீஸ் நிலையத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது. அந்த போனில் பேசியவர் மண்டைக்காடு அருகே புதூர் மீனவர் கிராமத்தில் ஒரு மீனவரின் வீட்டில் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் உஷார் அடைந்த போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள். மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் தலைமையில் போலீசார் புதூர் மீனவர் கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு உள்ள அந்த மீனவர் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த வீட்டில் ஒரு முதியவர் மட்டும் இருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது தங்க கட்டிகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்து உள்ளார். வீட்டின் பீரோ சாவியை போலீசார் கேட்டபோது, அந்த சாவி தன்னிடம் இல்லை என்றும் தனது மகனிடம் உள்ளதாகவும் மகன் வெளியில் சென்று விட்டதாகவும் கூறி விட்டார்.
இதனால் அந்த வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பீரோ சாவியை வைத்துள்ள அவரை வீட்டிற்கு வரவழைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அவர் வந்த பிறகு பீரோவில் சோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது. சோதனைக்கு பிறகு தான் தங்க கட்டிகள் பதுக்கல் உண்மையா? வெறும் புரளியா? என்பது தெரிய வரும். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்