குமரி மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை பதிவு முகாம்கள் 15 இடங்களில் நடக்கிறது
09-10-2014
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் விதமாக மத்திய அரசு ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வாரியாக ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற்று வந்தன. நாகர்கோவில் நகராட்சியில் வார்டு வாரியாக இந்த முகாம்கள் நடந்து வந்தது. இந்த நிலையில் சில பிரச்சினைகளால் ஆதார் அடையாள அட்டை பதிவு செய்யும் பணி இடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஏற்கனவே ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்து, அடையாள அட்டைகளை பெற்றவர்களைத்தவிர விடுபட்டவர்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் மீண்டும் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இதன்படி குமரி மாவட்டத்திலும் குறுவட்ட தலைமையிடங்களில் ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
தேவாளை தாலுகாவில் தோவாளை, அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி ஆகிய பகுதிகளிலும், அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும், கல்குளம் தாலுகாவில் தக்கலை, திருவிதாங்கோடு, குருந்தங்கோடு, திருவட்டார், குளச்சல், குலசேகரம் ஆகிய பகுதிகளிலும், விளவங்கோடு தாலுகாவில் பைங்குளம், ஏழுதேசம் ஆகிய பகுதிகளிலுமாக மொத்தம் 15 இடங்களில் ஆதார் அடையாள அட்டை பதிவு முகாம்கள் நடக்கிறது என்றும், இந்த முகாம்கள் மூலமாக 5 லட்சத்து 83 ஆயிரத்து 514 பேருக்கு ஆதார் அடையாள அட்டைக்கான பதிவுகள் நடைபெற இருக்கிறது என்றும், வீசா என்ற தனியார் அமைப்பு ஆதார் அட்டைக்கான பதிவுப்பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது என்றும் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தெரிவித்தார்.
நாகர்கோவில் நகராட்சியைப் பொறுத்த வரையில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள நகராட்சி நகர்நல மையத்தில் ஆதார் அட்டைக்கு பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் நேற்று காலையில் இருந்து மாலை வரை ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்