இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக தியாகம் செய்வார்கள்: பிரதமர் கருத்துக்கு முஸ்லிம்லீக் வரவேற்பு
22-09-2014
இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ் மாநில தலைவருமான காதர்மொய்தீன் குளச்சல் காயிதே மில்லத் மணி மண்டபத்தில் பேட்டி அளித்தபோது கூறியதாவது,
4 வருடங்களுக்கு ஒருமுறை இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தேர்தல் நடக்கும். இப்போது 4 வருடம் முடிகிறது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களுக்குள் உறுப்பினர்கள் சேர்க்கை முடிந்து விடும். டிசம்பர் 31–ந் தேதிக்குள் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. ஜனவரி மாதத்தில் அகில இந்திய நிர்வாகிகள் தேர்தல் நடக்கும்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி பங்கேற்கும். வருகிற 25–ம் தேதி தொகுதி மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். காஷ்மீர் வெள்ள நிவாரணம் நிதி ரூ.25 லட்சம் வழங்கவுள்ளோம். தேர்தலில் கேரளாவில் எங்கள் கட்சி காங்கிரசுடன் கூட்டணி. தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் கூட்டணி. மாநிலங்களுக்கு தகுந்தவாறு கூட்டணி அமையும். தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் 10 சதவீதம் தொகுதிகளை அரசியல் கட்சிகள் முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் நடக்கிறது. காவல்துறையினர் இரவில் மிகவும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக தியாகம் செய்வார்கள் என்று கூறிய பிரதமர் மோடியின் கருத்து ஏற்க கூடியது. நாங்கள் அதை வரவேற்கிறோம். முஸ்லிம் உணர்வுகளுக்கு அவர் மதிப்பளித்து உள்ளார். மோடி இந்துக்களுக்கு மட்டும் பிரதமர் அல்ல. இந்தியாவுக்கே அவர் பிரதமர். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் அப்துல் நாசர், துணை தலைவர் ஆர்.பி.எம்.சாகுல் அமீது, துணைச் செயலாளர் நசீம், செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் ஷாஜஹான், இளைஞர் அணி அமைப்பாளர் ரிபாய்கான், வேலூர் முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், குளச்சல் நகர தலைவர் சுபேர், செயலாளர் முகம்மது சபீக், பொருளாளர் செய்னுல் ஆப்தீன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்