மணவாளக்குறிச்சி அருகே உள்ள மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி தபால் அனுப்பிய மாணவர்கள்
22-09-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள மீனவ கிராமம் அழிக்கால். இங்கு கடந்த சில மாதங்களாக கடல்சீற்றத்தால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்து விடுகிறது. இதனால் வீடு சேதமடைந்து வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ– மாணவிகள் சரியான நேரத்திற்கு போக முடியவில்லை.
இது குறித்து கடந்த சில வருடங்களாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்த பிறகும் அதிகாரிகள் இதுநாள் வரையிலும் கண்டு கொள்ளவில்லை. முட்டம் பகுதியில் அமைய உள்ள மீன்பிடித்துறைமுகத்திற்கு கடலுக்குள் கல்போட்டு தடுக்கப்பட்டதால் தான் அழிக்கால் பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகுந்து விடுவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள்.
இதனால் கடல் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை வைத்து அழிக்கால் தூயமரியன்னை மாணவர் இயக்கத்தின் சார்பில் 300 மாணவ– மாணவிகள் தமிழக முதல்–அமைச்சருக்கு தபால் கார்டு அனுப்பி வைத்துள்ளனர். தபால் கார்டில் ‘‘கடல் அரிப்பால் உருக்குலையும் எங்கள் அழிக்கால் வீடுகளை காத்திட தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற வாசகம் உள்ளது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்