விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன
08-09-2014
குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 4500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
ஊர்வலத்துக்கு நாகர்கோவில் நகர தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நாகராஜா கோவில் திடலில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஒழுகினசேரி, வடசேரி, மணி மேடை சந்திப்பு, எஸ்.பி. அலுவலக சாலை, கட்டபொம்மன் சந்திப்பு, மீனாட்சிபுரம், கோட்டார் போலீஸ் நிலையம் சந்திப்பு, தாலுகா ஆபீஸ், வேப்பமூடு, பொதுப்பணித் துறை சாலை, செட்டிகுளம் சந்திப்பு, கோட்டார் பஜார், பீச் ரோடு சந்திப்பு, இருளப்பபுரம் வழியாக சென்று சங்கு துறை கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் வந்தார். அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் கேட்டு அறிந்தார். நேற்று காலையில் ஐ.ஜி. அபய்குமார் சிங் சிலைகள் கரைக்கும் இடத்தில் செய்யப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார்.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்