மணவாளக்குறிச்சி சின்னவிளை, பெரியவிளை, புதூர் மீனவ கிராம தொழிலாளர்கள் அகவிலைப்படி உயர்வு கேட்டு போராட்டம் நடத்த முடிவு
12-09-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை, பெரியவிளை மற்றும் புதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவ சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சின்னவிளை, பெரியவிளை, புதூர் ஆகிய 3 ஊர் மீனவ மக்கள் 1999 முதல் 2014 வரை எங்கள் ஊர் கடற்கரையில் இருந்து தலைசுமடு மூலம் தாதுமணலை மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு கொடுத்து கொண்டிருக்கிறோம். மேற்கண்ட 3 ஊரையும் சேர்ந்த 1300 தொழிலாளர்கள் நேரடியாக இந்த மணல் வேளையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். இந்த தொழிலை நம்பி 10 ஆயிரம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் கடல் சீற்றத்துடன் இருப்பதால், அந்த மாதம் மணல் எடுக்க முடியாது. எனவே ஆண்டுக்கு 9 மாதங்கள் மட்டுமே வேலை என்ற அடிப்படையில் செப்டம்பர் 1-ம் தேதி மணல் வேலை தொடங்க வேண்டும்.
கடந்த ஆண்டில் ஒரு டன் மணலுக்கு ரூ.202.46 வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி உயர்வு செய்து புதிய கூலி வழங்கப்படும். கடந்த ஆண்டு 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் நாங்கள் 15 சதவீதம் உயர்த்தி வழங்கக்கோரி மணல் ஆலை நிர்வாகத்திடம் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அது தோல்வியில் முடிந்ததால் தக்கலை கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் 6 சதவீதம் கூடுதலாக கொடுக்க அறிவுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்ட மணல் ஆலை நிர்வாகம் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேசி கடந்த 10-ம் தேதி காலை தெரிவிப்பதாக கூறினார்கள். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வருகிற 15-ம் தேதிக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், எங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி வருகிற 15-ம் தேதி காலை 7 மணி முதல் 3 ஊர் சங்க தொழிலாளர்களும், அவர்களுடைய குடும்பங்களும் சேர்ந்து போராட அனுமதி தருமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Manavai News