குமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ. 56.48 கோடி ஒதுக்கீடு
20-09-2014
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ. 56.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, குமரி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள பல்வேறு சாலைகளை பராமரிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
2014-15 ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 35 பிரதான சாலைப் பணிகளுக்காக ரூ.42.18 கோடியும், 8 பாலப் பணிகளுக்காக ரூ.1.24 கோடியும், 30 சாலைப் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.7.84 கோடியும் என மொத்தம் 73 பணிகளுக்காக ரூ.51.26 கோடி அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் திட்டம் சாராப் பணிகள் மூலம் 14 சாலைகளை மேம்பாடு செய்ய ரூ.5.22 கோடி மதிப்பீட்டிற்கு மாவட்ட ஆட்சியரால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் நிகழ் நிதியாண்டில் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.56.48 கோடிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்துப் பணிகளையும் 31.3.2015 க்குள் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்