மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடலில் ராட்சத அலையில் சிக்கிய தொழிலாளி: தேடும் பணி தீவிரம்
18-08-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்லடிவிளை பகுதியை சேர்ந்தவர் தம்பித்துரை டேனியல் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் தனது தம்பி டேவிட் ராஜா டேனியல் மற்றும் தங்களுடைய குழந்தைகளுடன் சின்னவிளை கடலுக்கு நேற்று மதிய வேளையில் வந்தனர். அனைவரும் அங்குள்ள பாறையில் நின்று கடல் அலையை ரசித்துக்கொண்டு நின்றனர்.
அப்போது ஆக்ரோசமாக வந்த ராட்சத அலை ஒன்று பாறை மீது மோதியதில், பாறையில் நின்று கொண்டிருந்த தம்பித்துரை டேனியல் மற்றும் அவரது தம்பி மகன் அஸ்வின் டிஜியோ (வயது 13) ஆகிய இருவரும் கடலில் தவறி விழுந்தனர். உடனே கடல் அலை அவர்களை இழுத்து சென்றது. அப்போது அருகில் இருந்தவர்கள் அஸ்வின் டிஜியோவை காப்பாற்றினர்.
ஆனால் தம்பித்துரை டேனியலை காப்பாற்ற முடியவில்லை. அவரை கடல் அலை கடலுக்குள் இழுத்து சென்றுவிட்டது. அப்போது அவரது உறவினர்கள் “காப்பாற்றுங்கள்.... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டனர். இதைப்பார்த்த சின்னவிளை மீனவர்கள் ஓடிவந்து மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் தம்பித்துரை டேனியல் கடலுக்குள் மாயமாகி விட்டார். அவரது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
இதுகுறித்து குளச்சல் கடலோர காவல்பட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தம்பித்துரை டேனியலை தீவிரமாக தேடிவருகின்றனர்.
Tags:
Manavai News