நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
15-06-2014
நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்புறம் ஓட்டல் மற்றும் கடைகள் அரசு விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே இந்த கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து கோவில் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகளை உடனே அகற்றும்படி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். அறிவிப்பு கொடுத்து பல நாட்கள் ஆன பின்பும் அவர்கள் கடைகளை அப்புறப்படுத்த வில்லை.
எனவே நேற்று காலை அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், ஆக்கிரமிப்பு அகற்றும் குழு தலைவர் ஜீவானந்தம், நில அளவை அலுவலர் அய்யப்பன் மற்றும் திருக்கோவில் ஸ்ரீகாரியம் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். அவர்கள் கோவில் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஓட்டல், சலூன், டீக்கடை, குளிர்பான கடை ஆகிய 4 கடைகளை அங்கிருந்து அப்பறப்படுத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்புடன் கோவில் முன்பிருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
Tags:
District News