வீட்டை இடிக்கும் போது மேற்கூரை சரிந்து விழுந்து தொழிலாளி சாவு - 2 பேர் படுகாயம்
12-06-2014
குளச்சல் அருகே மேலகோடிமுனை பகுதியை சேர்ந்தவர் ஜான்வில்சன் (வயது 43). இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு, புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து பழைய வீட்டை இடிக்கும் பணியை கருமன்கூடலை சேர்ந்த காண்டிராக்டர் ராஜப்பனிடம் ஒப்படைத்தார்.
அவர் கண்ணாட்டுவிளை அருகே உள்ள ஆலுவிளையை அடுத்த கக்கோடு பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் (வயது 65), மண்டைக்காடு அருகே உள்ள லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஜான்சன் (45). காரியாவிளையைச் சேர்ந்த செல்வக்குமார் (35) ஆகியோரிடம் வீட்டை இடிக்கும் வேலையை ஒப்படைத்தார். அவர்கள் 3 பேரும் பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கூரை திடீரென எதிர்பாராதவிதமாக செல்லப்பன் உள்ளிட்ட 3 பேர் மீதும் சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய செல்லப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார்.
ஜான்சன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. செல்வக்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுபற்றி குளச்சல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:
District News