தமிழகத்தில் அ.தி.மு.க. போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37 வெற்றி பெற்று வரலாற்று சாதனை
17-05-2014
இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. துணிச்சலுடன் தனித்து களம் இறங்கியது முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டார். அவரது உரையை கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்து உள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதாவும், தர்மபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரசும் வெற்றி பெற்றன. இந்த 3 தொகுதிகள் தவிர மற்ற 37 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடினார்கள். இது, இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வெற்றி ஆகும். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கூட அ.தி.மு.க. இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது இல்லை.
கடந்த 2004–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 33 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதன்பிறகு 2009–ம் ஆண்டு தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி 9 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கிய அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.
Tags:
State News