தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று நாகர்கோவில் வருகை:
அலைகடலென திரண்ட மக்கள் வெள்ளம்
09-03-2014
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 3–ம் தேதி காஞ்சீபுரத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர் ஸ்ரீபெரும்புதூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜாண் தங்கத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த முதலமைச்சர் ஜெயலலிதா அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2.30 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து, பின்பு கார் மூலம் பொதுகூட்டம் நடைபெற்ற பொருட்காட்சி மைதானத்திற்கு வந்தார். அவரை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், முனுசாமி, பச்சைமால் ஆகியோரும், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களான வக்பு வாரிய தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் வரவேற்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். பொதுக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பொருள்காட்சி திடல் மைதானம் நிரம்பியதுடன் வெளியிலும் மக்கள் குவிந்து காணப்பட்டனர். கூட்டம் முடிந்த பின்னர் நாகர்கோவில் நகரமே மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்பட்டது.
போட்டோஸ்
புதியபுயல் முருகன்
Tags:
District News