லோடு ஆட்டோ கவிழ்ந்து இன்ஜினியரிங் பட்டத்தாரி வாலிபர் சாவு
2 பேர் காயம்
04-12-2013
வெள்ளமடம் அருகே உள்ள மாதவலாயம் ஊரை சேர்ந்தவர் நவாஸ் செரீப் (வயது 22). இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் பட்டத்தாரி ஆவார். இவர் பாய் செய்ய தேவைப்படும் சம்பை அறுக்கும் வேலைக்கும் சென்று வந்தார்.
நேற்று காலை மாதவலாயம் பகுதியை சேர்ந்த முஹம்மது யாசீன் (வயது 33) தனது லோடு ஆட்டோவில் அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தில் சம்பை அறுக்க சென்றார். அப்போது மாதவலாயத்தை சேர்ந்த முஹம்மது அமர் (60), நவாஸ் செரீப் (22) ஆகியோரையும் அழைத்து சென்றார்.
லோடு ஆட்டோ அழகப்பபுரம்- நவமணி சாலையில் செல்லும் போது திடீரென ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் நவாஸ் செரீப் உள்பட மூவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மார்பு பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து படுகாயம் அடைந்த நவாஸ் செரீப் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். முஹம்மது யாசீன், முஹம்மது அமர் ஆகியோர் சிகிட்சைக்காக இடலாக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்த நவாஸ் செரீப் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாம்சன், முத்துகுமரன், பெருமாள் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:
District News