மணவாளக்குறிச்சி அருகே பிணத்தை ரோட்டில் வைத்து
பொதுமக்கள் போராட்டம்
27-06-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிசந்தை செட்டிவிளை பகுதியில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சுடுகாட்டிற்கு செல்லும் வழிப்பாதை தனியாருக்கு சொந்தமான இடமாகும்.
கடந்த 35 வருடங்களாக பொதுமக்கள் இந்த பாதை வழியாகத்தான் பிணத்தை கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் அந்த இடத்திற்கு சொந்தக்காரர் பாதையில் சுவர் கட்டிவிட்டார். இதனால் சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாதை நிலை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டுக்கு சென்றது.
இந்நிலையில் நேற்று வெள்ளிசந்தை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் சுவர் கட்டி இருந்ததால் பிணத்தை கொண்டு செல்ல முடியாதை நிலை ஏற்பட்டது.
உடனே அவர்கள் பிணத்தை ரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் 200-க்கும் மேற்பட்டவர்கள் சுவரை இடித்து பாதை ஏற்படுத்தி பிணத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அருண்சத்தியா, துணை தாசில்தார் கிருஷ்ணகுமாரி, வெள்ளிசந்தை கிராம நிர்வாக அதிகாரி சோபி, குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ், குளச்சல் இன்ஸ்பெக்டர் குகநாதன், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் பாஸ்கர், வெள்ளிசந்தை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், மோகன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடமும், சுவர் கட்டப்பட்ட இடத்துக்கு சொந்தக்காரரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ஆர்.டி.ஓ. அருண்சத்தியா, காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டது தொடர்பாக புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடருவதாகவும், பாதையை பொதுமக்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்