கட்டிட பட வரைவாளர் பாடப்பிரிவில் குடிசை வீட்டில் வசிக்கும் மாணவி மாநிலத்தில் 2–வது இடம் பிடித்தார்
11-05-2013
பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியானது. இதில் நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஏ.நித்யா கட்டிட பட வரைவாளர் பாடப்பிரிவில் 1,058 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் 2–வது இடத்தை பிடித்துள்ளார்.
நித்யா ஒவ்வொரு பாடத்திலும் எடுத்த மதிப்பெண்கள் வருமாறு :– தமிழ் 179, ஆங்கிலம் 153, கணிதம் 126, சிவில் தியரி 200, செய்முறை–1 200, செய்முறை–2 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,058 எடுத்துள்ளார்.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் பின்புறம் உள்ள குடிசை பகுதியில் மாணவி நித்யா வீடு உள்ளது. அங்கு சென்ற போது, குடிசை வீட்டில் இருந்து நித்யா வெளியே வந்தார். அவரிடம் மதிப்பெண் விவரங்களை கூறியதும், மகிழ்ச்சியடைந்தார். உடனே அவருடைய தாய் ராணி, மகளுக்கு முத்தமிட்டு பாராட்டினார். மாணவி நித்யா கூறியதாவது :– என் தந்தை ஆறுமுகம் கட்டிட வேலை செய்து வருகிறார். எனது அண்ணன் சுப்பிரமணியன் பாலிடெக்னிக் முடித்து விட்டு காண்டிராக்டு வேலைக்கு சென்று வருகிறார்.
நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 348 மதிப்பெண் எடுத்தேன். இதைத்தொடர்ந்து சிவில் என்ஜினீயராக கட்டிட பட வரைவாளர் பாடப்பிரிவில் சேர்ந்து படித்தேன். எனது படிப்புக்காக டி.வி. இணைப்பை பெற்றோர் துண்டித்து விட்டனர். தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையும் படித்தேன். ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் என் பெற்றோரும் எனக்கு வேண்டிய உதவிகளை செய்ததால் தான் நான் மாநிலத்தில் 2–வது இடத்தை பிடிக்க முடிந்தது. நான் சிவில் என்ஜினீயர் தமிழ் மீடியத்தில் சேர்ந்து படித்து என்ஜினீயராக வேண்டும் என்பதே எனது ஆசை ஆகும். இவ்வாறு மாணவி நித்யா கூறினார்.
அவருக்கு தலைமை ஆசிரியை தங்கம் ஷோபனா இனிப்பு வழங்கி பாராட்டினார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கம் ஷோபனா நிருபர்களிடம் கூறும் போது, ‘‘நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 தேர்வை 327 மாணவிகள் எழுதினார்கள். இதில் 321 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98 சதவீத தேர்ச்சி ஆகும். கணிதம் பாடத்தில் ஒரு மாணவி 200–க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளார். 1,000–க்கு மேல் 13 மாணவிகள் மதிப்பெண் எடுத்துள்ளனர்’’ என்றார்.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்