மாதா அமிர்தானந்தமயி தேவி குமரி வருகை
01-04-2013
மாதா அமிர்தானந்தமயி அவர்கள் இம்மாதம் 21-ம் அன்று கன்னியாகுமரி வருகிறார். அன்று (21-04-2013 ) மாலை 6 மணி அளவில் கன்னியாகுமரி அமிர்தபுரம் சரவணதேரி அமிர்த வித்யாலயம் பள்ளி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- “உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் அம்மா என்று அன்புடன் போற்றப்படும் சத்குரு ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் வரும் 21-04-2013 , ஞாயிறு அன்று கன்னியாகுமரி நகரத்திற்கு விஜயம் செய்யவிருக்கிறார்கள்.
அம்மா அவர்கள் தமது தூய அன்பினாலும், தாய்மை அரவணைப்பினாலும் மக்களின் மனதில் ஆக்கபூர்வமான மாற்றத்தையும், ஆன்மீக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அம்மாவின் தரிசனம் மக்களின் துன்பச்சுமையை குறைத்து நம்பிக்கையையும், பக்தியையும் தோற்றுவிக்கிறது. கடந்த 40 வருடங்களாக அம்மா அவர்கள் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி சுமார் 4 கோடி மக்களுக்கு நேரடியாக தரிசனம் தந்துள்ளார்கள்.
மேலும் அம்மாவின் மாபெரும் சேவையை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை மாதா அமிர்தானந்தமயி மடத்தை சர்வதேச தொண்டு நிறுவனமாக அங்கீகரித்து உள்ளது. வரும் 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கன்னியாகுமரி நகரில் ஒரு மாபெரும் பொதுநிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியின் போது அம்மாவின் சத்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசனம் நடைபெறும்.
அந்நிகழ்ச்சியில் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடனும், உற்றார் உறவினருடனும், நண்பர்களுடனும் கலந்து கொண்டு அம்மாவின் ஆசி பெற அன்புடன் அழைக்கின்றோம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்