மணவாளக்குறிச்சியில் நள்ளிரவில் குடிசைவீடு தீப்பற்றி எரிந்து சாம்பல்

மணவாளக்குறிச்சியில் 
நள்ளிரவில் குடிசைவீடு தீப்பற்றி எரிந்து சாம்பல்
15-03-2013
மணவாளக்குறிச்சி, பம்மத்துமூலை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் 4 வீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவருடைய வீடு சுற்றிலும் ஓலைக்கொண்டு வேயப்பட்ட குடிசை வீடாகும்.
தீக்கரியான குடிசை வீடு
இந்நிலையில் நேற்று இரவு ஐயப்பன் வேலை முடிந்து வந்து, சாப்பிட்டுவிட்டு தூங்கினார். இரவில் சுமார் 12.15 மணி அளவில் வீட்டில் மேற்கூரையில் தீ எரிந்துள்ளது. அப்போது ஐயப்பன், அவருடைய மனைவி மற்றும் 4 குழந்தைகளும் குடிசைக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அதிக வெப்பத்துடன் வெளிச்சம் வந்ததில் ஐயப்பன் விழித்துவிட்டார்.
ஐயப்பன் குடும்பத்துடன். உடுத்திருக்கும் துணி தவிர
அனைத்தும் தீயில் எரிந்தது
உடனே ஐயப்பன் சத்தம் போட்டுகொண்டு மனைவியையும், தன்னுடைய 4 பிள்ளைகளையும் தூக்கத்தில் இருந்து எழும்பசெய்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார். அதற்குள் தீ வீட்டின் அனைத்து பகுதிக்கும் பரவியது. வெளியே வந்த ஐயப்பன், அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளும், தங்கள் வீடு எரிவதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

உடனே அக்கம்பக்கத்தவர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரிகள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் தீ முழுமையாக எரிந்துவிட்டது. தீ எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை என ஐயப்பன் கூறினார்.
எரிந்து சாம்பலான பொருட்கள்
ஐயப்பன் 4 வீலர் மெக்கானிக்காக தொழில் புரிவதால் அவருடைய வீட்டில் மெக்கானிக் சம்பந்தமான பொருட்களை வைத்திருந்தார். அந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என ஐயப்பன் தெரிவித்தார். மேலும் வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்ததுடன், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.
இதுபற்றி ஐயப்பன் மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்திலும், பஞ்சாயத்து அலுவலகத்திலும் தகவல் தெரிவித்து, ஏதாவது உதவி கிடைக்குமா என எதிர்நோக்கி உள்ளார்.

Post a Comment

Previous News Next News