மணவாளக்குறிச்சியில் ஓட்டலில் 3 லட்சத்தை தவறவிட்ட நபர்:
மீட்டு கொடுத்த ஓட்டல் அதிபர்
15-03-2013
நாகர்கோவில் செட்டிகுளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் சுப்பிரமணியன். இவர் கடந்த இருதினங்களுக்கு முன்பு மாலை வேளையில் மணவாளக்குறிச்சியில் உள்ள பாக்த்தாத் ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். அவருக்கு ஓட்டலில் வேலை பார்க்கும் முஹம்மது ஷெரீப் என்பவர் உணவு பரிமாறினார். சாப்பிட்டு முடிந்ததும் அதற்குரிய பணத்தை கொடுத்துவிட்டு சென்று விட்டார்.
பணத்தை மீட்டு ஓட்டல் முதலாளியிடம் கொடுத்த ஊழியர் காதர் மற்றும் உரிமையாளரின் மகன் நாசர் அலி |
அப்போது ஓட்டலில் வேலைபார்க்கும் மற்றொரு நபர் காதர் என்பவர் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றுவிட்டார் என ஓட்டல் முதலாளி சாகுல் ஹமீதிடம் கூறினார். உடனே ஓட்டல் உரிமையாளர் அந்த பையை திறந்து பார்த்தார். அதில் 500 ரூபாய் நோட்டுகள் 6 கட்டுகள் (ரூ.3 லட்சம்) இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ரூ. 3 லட்சத்தை அந்த பையுடன் போலீசில் ஒப்படைத்தார்.
இந்நிலையில் பணத்தை தவறவிட்ட சுப்பிரமணியன் சிறிது நேரத்தில் பதற்றத்துடன் ஓட்டலுக்கு வந்தார். அவர் சாப்பிடும் போது தன்னுடைய பணப்பையை மறந்து போய் விட்டேன் என்று கூறினார். உடனே ஓட்டல் உரிமையாளர் சாகுல் ஹமீது பணத்தை போலீசில் ஒப்படைத்த தகவலை கூறி அழைத்து சென்றார்.
இதைதொடர்ந்து சுப்பிரமணியன் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்துவிடம் இதுகுறித்த விபரத்தை கூறினார். கடியப்பட்டணம் புனித அந்தோனியார் ஆலயத்துக்கும், புனித பீட்டர்பால் ஆலயத்துக்கும் 2 ஜெனரேட்டர்கள் வாங்க வேண்டும் என கேட்டிருந்தனர். 2 ஜெனறேட்டர்களுக்கும் ரூ. 6 லட்சத்துக்கு மேல் ஆகும். இதற்கு முன்பணமாக ரூ. 3 லட்சம் கொடுத்தார்கள். அதை வாங்கிய பின்னர் மணவாளக்குறிச்சி வந்து ஓட்டலில் சாப்பிட்ட போது பணப்பையை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டேன் என்று கூறினார். அவர் பணப்பை குறித்த சரியான விபரம் கூறியதால் அவரிடம் ரூ.3 லட்சத்தை சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து ஒப்படைத்தார்.
மேலும் போலீசில் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டல் உரிமையாளர் சாகுல் ஹமீது, அவருடைய மகன் நாசர் அலி, ஊழியர் காதர் ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுமார், தனிஸ்லாஸ், சதாசிவம், தனிப்பிரிவு ஏட்டு அருளரசன், தலைமை காவலர் பத்மனாபபிள்ளை, தவறவிட்ட பணத்தை பெற்றுக்கொண்ட சிப்பிரமனியம் ஆகியோர் பாராட்டினர்.