பள்ளியாடி பழைய பள்ளி திருத்தலத்தில்
மத நல்லிணக்க சமபந்தி விருந்து
21-03-2013
பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் மதநல்லிணக்க சமபந்தி விருந்து நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்திற்குள்பட்ட பள்ளியாடியில் பழைய பள்ளி திருத்தலம் உள்ளது. இங்கு சுமார் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு புளிய மரத்தின் கீழ் ஒரு விளக்கு அமைந்துள்ளது.
பள்ளியாடி பழைய பள்ளி திருத்தலத்தில் உள்ள தீபத்துடன் கூடிய குத்துவிளக்குகள். |
இத் திருத்தலத்தில் சமபந்தி விருந்து ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3- ம் திங்கள்கிழமை நடைபெறும். தீப ஒளியால் இறைவனை பிரார்த்தனை செய்வது இத் திருத்தலத்தின் சிறப்பு. எண்ணெய் திரி, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஆகிய வழிபாட்டு பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரரவர் முறைப்படி வழிபடுகின்றனர். இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி திருத்தலத்திற்கு செலுத்தும் காணிக்கை உணவு பொருள்களை சேர்த்து சமைத்து இங்கு வரும் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்தாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) மாலை சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. இதில் மும்மத தலைவர்கள் பங்கேற்று பிராத்தனை செய்தனர்.
சமபந்தி விருந்துக்காக காய்கறிகள் வெட்டும் பெண்கள் |
திங்கள்கிழமை காலை நடைபெற்ற இந்த சமபந்தி விருந்து நிகழ்ச்சிக்கு இத் திருத்தல தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.எஸ். குமார்,செயலர் ஐயப்பன்,பொதுச்செயலர் ஆல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியாடி பங்கு அருள்பணியாளர் ராபர்ட்,வள்ளலார் பேரவை தலைவர் சிவகுமார்,இரவிபுதூர்க்கடை ஜமாத் நிர்வாகி கலில்ரகுமான் ஆகிய மும்மத தலைவர்கள் பேசினர். சமபந்தி விருந்து நிகழச்சியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார். இதில் பொருளர் சுந்தர்ராஜ்,திருத்தல முன்னாள் தலைவர் ஜெயசந்திரன், குமேஷ், ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய சமபந்தி விருந்து மாலை வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
செய்தி & போட்டோஸ் சுரேஷ் |