கள்ளக்காதலியுடன் தொழில் அதிபர் படுகொலை தம்பி பிடிபட்டார்
மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
23-03-2013
நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் மாகின்ஷா (வயது 41). மசாலா நிறுவனம் நடத்தி வந்தார். இத்துடன் தங்க வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருந்தனர். கடந்த 2004–ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் 2 குழந்தைகளும் இறந்து விட்டனர்.
இந்நிலையில் மாகின்ஷா மனைவியை பிரிந்தார். நாகர்கோவில் ராணித்தோட்டம் தடி டெப்போ ரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். இந்த வீட்டில் தன் கள்ளக்காதலி கிறிஸ்டல் ராணியுடன் (33) தங்கியிருந்தார். இந்த வீடு பங்களா வீடு ஆகும். மாத வாடகை ரூ.15 ஆயிரம். வீட்டில் இவர்களுக்கு வேலைகள் செய்து கொடுக்க செல்லத்துரை (44) என்பவர் இருக்கிறார்.
வேலைக்காரர் செல்லத்துரை நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்து கொலை கொலை என கதறினார். உடனே அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்றனர். அங்கு வீட்டின் வரவேற்பு அறையில் மாகின்ஷா கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இவருடைய கள்ளக்காதலி கிறிஸ்டல் ராணி படுக்கை அறையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாகின்ஷாவையும், கள்ளக்காதலியையும் மாகின்ஷாவின் தம்பி அமீர் அனிஷ் (35) உள்பட 3 பேர் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களைப் பிடிக்க வியூகம் வகுத்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடவியல் நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். போலீஸ் தேடுதல் வேட்டையில் மாகின்ஷாவின் தம்பி பிடிபட்டார். இவரிடம் விசாரணை நடத்தியபோது பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரிபாய், வடசேரி கட்டையன்விளையைச் சேர்ந்த அன்பு, சையதுஅலி ஆகியோருடன் சேர்ந்து கொலைத்திட்டத்தை நிறைவேற்றியது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட மாகின்ஷா, மசாலா வியாபாரம், தங்க வியாபாரம் என்பதை மக்கள் நம்பும் விதத்தில் மேலோட்டமாக வைத்துள்ளார். ஆனால் உண்மையில் அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதாவது, ஒன்றுக்கு மூன்று என்ற அடிப்படையில் பணத்தை அதிகமாக கொடுக்கும் ரகசிய தொழில் செய்துள்ளார். இவரிடம் இரட்டிப்பு அல்லது மூன்று மடங்கு பணம் பெற விரும்புகிறவர்கள் லட்சக்கணக்கான பணத்தை மாகின்ஷாவிடம் கொடுப்பதும், இதற்கு பதில் கட்டு கட்டாக பணக்கட்டுகளை அவர் திருப்பி அளிப்பதும் வழக்கம். ஆனால் கொடுக்கப்படும் பணக்கட்டுகளின் மேற்பரப்பில் ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள் சில இருக்கும். இதைப்போல அடிப்பகுதியிலும் இருக்கும். இடையில் அனைத்தும் வெற்றுத்தாள்கள்.
இந்த பண பரிவர்த்தனை நடக்கும் இடம், நகரின் முக்கியமான சந்திப்புகளாக இருக்கும். வாங்குகிறவர்கள் அங்கு வைத்து பிரித்து பார்த்து விட முடியாது. வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று பார்க்கும்போது உண்மை தெரிந்து அவரிடம் கேட்பார்கள். ஆனால் இதுபற்றி புகார் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் யாரிடமும் புகார் கொடுப்பதில்லை. இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட மாகின்ஷா, பலரிடம் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். இப்படி மோசடிக்கு ஆளாகிய முன்விரோதத்திலேயே மேற்கண்ட நபர்கள் கொலை செய்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மாகின்ஷாவின் தம்பி அமீர் அனிசுக்கு, தன் அண்ணன் இன்னொரு பெண்ணுடன் கள்ளக்குடித்தனம் செய்வதும், அவருடைய ஏமாற்று தொழிலும் பிடிக்கவில்லை. இதனால் அவர் மற்ற நபர்களுடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிடிபட்ட அமீர் அனிசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய மற்ற 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்