காணிக்கை

காணிக்கை
11-12-2012

உலகத்தை படைத்தவர் கடவுள். இந்த உலகத்திலுள்ள உயிரினங்களைப் படைத்தவர் கடவுள். இந்த உலகத்திலுள்ள பழங்கள், தானியங்கள், கிழங்குகள் போன்ற பலவிதமான உணவுப் பொருட்களை படைத்தவர் கடவுள். கடலினை படைத்தவர் கடவுள். கடலில் வாழும் சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை படைத்தவர் கடவுள். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனை படைத்தவரும் கடவுளே.
மனிதனையே படைத்த கடவுளுக்கு அவன் தயாரிக்கும் பணம் என்ற காகித பேப்பரை படைக்கத் தெரியாதா அல்லது அவரால் முடியாதா. அனைத்தையும் படைத்த கடவுளுக்கு, சர்வ வல்லமை உள்ள கடவுளுக்கு மகா ஞானம் உள்ள கடவுளுக்கு, பணம் எதற்கு சிந்திப்பீர்.
நாம், நம்முடைய வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு பலவிதமான பலகாரங்கள் செய்து சாப்பிடக் கொடுக்கிறோம் அல்லவா,  அல்லது பலவிதமான உணவு வகைகளை சமைத்துக் கொடுக்கிறோம் அல்லவா, அல்லது பாயாசம் பண்ணிக் கொடுக்கிறோம்  அல்லவா, இவை எல்லாம் எதற்காக, நம் பிள்ளைகளிடம் அன்பு இருப்பதால் அல்லவா. இது போலவே நாம் அளவுக்கதிகமாக அன்பு செலுத்தும் கடவுளுக்கு முதலிடத்தை முதல் கனியை கொடுக்கலாம் அல்லவா. நம் வீடுகளில் செய்யும் உணவுப் பொருட்களில் முதல் பங்கை கடவுளுக்கு காணிக்கையாக படைப்போம், காணிக்கையாக படைத்ததை நம் வீடுகளில் வரும் ஏழைகளுக்கு கொடுப்போம். ஏழைகளுக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான். 

காணிக்கையாக இனி யாரும் பணம் செலுத்தாதீர். பூக்களை செலுத்துவீர் அல்லது நறுமணப் பொருட்களை செலுத்துவீர். நல்ல பழவகைகளை செலுத்துவீர். நல்ல   பலகாரங்களை செலுத்துவீர். முதல்முதலில் காய்க்கும்காய்களையும், பழங்களையும் காணிக்கையாக செலுத்துவோம். பணம் மற்றும் தங்கம் போன்ற விலையேறப்பெற்றப் பொருட்களை இனி காணிக்கையாக யாரும் செலுத்த வேண்டாம்.

நம்மை படைத்தவர் யார்? கடவுள் தானே. நாம் யார்? கடவுளின் பிள்ளைகள். அப்படியானால் ஒரு பைத்தியம் ஆனாலும், ஒரு குருடன் ஆனாலும், ஒரு திருடன் ஆனாலும், ஒரு ஏழை ஆனாலும், ஒரு பணக்காரன் ஆனாலும், யாவரும் கடவுளின் பிள்ளைகளே. கடவுளின் ஒரு பணக்கார பிள்ளை உடல் முழுவதும் நகைகளாக அணியும் போது, கடவுளின் மற்றொரு பிள்ளை தாலிக்கு கூட தங்கம் இல்லாமல் ஏங்கும் போது கடவுளின் மனம் நோகாதா.

பொருத்தனைகளும், வேண்டுதல்களும் இன்று முதல் மாறட்டும். கோவிலுக்கு செலுத்தும் காணிக்கை பணத்தை அடுத்தவீட்டு வறுமையில் வாடும் ஏழைகளுக்கு, அல்லது தாலிக்கு ஏங்கும் கன்னிப் பெண்களுக்கு கொடுப்பேன் என்று வேண்டுதல் செய்யுங்கள். ஏழைகளும் உங்களை வாழ்த்துவார்கள், கடவுளும் மனம் குளிர்ந்து உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பார். நம் நாட்டில் 20 ரூபாய் கூட தினம் வருமானம் இல்லாமல் பலகோடி கடவுளின் பிள்ளைகள்இருக்கும் போது யாருக்கும் பயன்படாமல், கோவில்களில், தங்கங்களும், வைரங்களும், பணங்களும் குப்பையாக சேர்ந்தால் கடவுள் இரங்குவாரா, உண்மையாக ஆசீர்வதிப்பாரா, சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

குடி குடும்பத்தை கெடுக்கும், மதுவை மறப்போம்.

என்றென்றும் மகிழ்வுடன்
ஷாலின்
இந்தியன் விக்டரி பார்ட்டி

Post a Comment

Previous News Next News