மாடுகள் விற்பனைக்கு தடை விதித்து மத்திய உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.
இதுபோல் குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்கம் மற்றும் மாவட்ட சிறுபான்மை அமைப்புகள் இணைந்து நேற்று தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டம் தக்கலை அண்ணாசிலை அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்கத்தலைவர் பிரைட் சேவியர் தலைமை தாங்கினார்.
பணி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் ஜலஸ்டீன் ஜெரால்டு, ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் உயர்மட்ட குழு ஆலோசகர் அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா, கோட்டார் மறைமாவட்ட கத்தோலிக்க சங்க தலைவர் வக்கீல் லீனஸ் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டார் மறைமாட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், எழுத்தாளர் பொன்னிலன், மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அப்துல் லத்தீப் ஆகியோர் ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் முன்னாள் எம்.பி. பெல்லாமின், முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு தலைவர் கான், குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் மரிய அல்போன்ஸ், கத்தோலிக்க சங்க நிர்வாகிகள், அன்பிய பணிக்குழு நிர்வாகிகள், அருட்பணி பேரவையினர், பொதுநிலையினர் பணிக்குழு, பெண்கள் பணிக்குழு நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசை கண்டித்தும், மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
*கால்நடைகளை மதத்தின் அடையாமாக கருதி உண்ணலாமா வேண்டாமா? என்று மத்திய அரசு முடிவு செய்வது நாட்டின் அரசியல் அமைப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரானது.
*வயது முதிர்ந்த பசுக்களை பராமரிக்க கட்டாய படுத்துவதும், பன்னாட்டு நிறுவனங்களிடம் உணவு தேவைகளை ஒப்படைத்து விவசாயிகளை ஒடுக்க நினைப்பதையும் கண்டிக்கிறோம்.
*மாற்று மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதும், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதும் மத்திய அரசின் சகிப்பு தன்மையின்மையை காட்டுகிறது.
மத்திய அரசு இந்த செயல்பாடுகளை கைவிடவேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் ஆர்ப்பாட்டத்தை கத்தோலிக்க சங்க பொருளாளர் ஜான் ஜெஸ்டின்ராஜ் முடித்து வைத்தார்.
Tags:
District News