பிழைப்புக்காக சவுதி அரேபியா சென்ற குமரி மாவட்ட தொழிலாளியின் 23 ஆண்டுகால பாலைவன வாழ்க்கை

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம் ராஜா மரியான் (வயது 52). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 1994–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏஜெண்டு ஒருவரின் மூலம் பிழைப்புக்காக சவுதி அரேபியா சென்றார். அங்கு ஹைல் மாகாணத்தில் ஒரு பாலைவன கிராமத்தில் உள்ள பேரீச்சை தோட்டத்தில் விவசாய தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார்.
அந்த பகுதியானது நகரத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. அருகில் வேறு ஊர்களோ அல்லது குடியிருப்புகளோ இல்லாததால் வேறு யாரையும் பார்த்து பேசக்கூடி முடியாத நிலையிலும், தன் குடும்ப சூழல் கருதி ஞானபிரகாசம் ராஜா மரியான் அந்த தோட்டத்திலேயே தங்கி வேலை செய்து வந்தார்.

கஷ்டப்பட்டு வேலை பார்த்து அவர், மாதம் பிறந்ததும் சம்பளம் தருவார்கள், வீட்டு செலவுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்து அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. சம்பளம் எதுவும் தரவில்லை. தொடர்ந்து அந்த தோட்டத்தின் உரிமையாளர் 6 மாதங்களுக்கு சம்பளம் தரவில்லை. வெறும் சாப்பாடு மட்டும் தான் கிடைத்தது.

6 மாதம் கழித்து அந்த தோட்டத்து உரிமையாளர் 100 ரியால் (இந்திய மதிப்பில் ரூ.1,711 ) மட்டுமே சம்பளமாக தந்தார். பின்னர் அவர் ‘உனது வேலை சரியில்லை எனவே நீ வேறு இடத்திற்கு சென்றுவிடு’ என கூறி மற்றொரு நபரிடம் அனுப்பிவிட்டார். அந்த 2–வது நபரும் சில மாதங்கள் வேலைவாங்கினார். அதன்பிறகு வேறு ஒருவரிடம் 3–வதாக வேலைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இப்படியாக ஞானபிரகாசம் ராஜா மரியான் அந்த பாலைவன கிராமத்தில் தனது வாழ்க்கையை தொடங்கி விட்டார். சம்பளம் எதுவும் இல்லாமல் வெறும் சாப்பாடு மட்டுமே பெற்று தனது உடல் உழைப்பை தரத் தொடங்கினார்.

விசா, பாஸ்போர்ட் புதுப்பிக்காமல் சட்ட விரோதமாக பாலைவனத்திலேயே தன் வாழ்நாளை கழித்த ஞானபிரகாசம் ராஜா மரியான் 23 ஆண்டுகால வாழ்க்கையை பாலவனத்திலேயே முடித்து விட்டார். இந்த சமயத்தில் சவுதி அரேபியா அரசு சட்டவிரோதமாக அல்லது நாட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுபவர்கள் தானாக சரண் அடைந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த அறிவிப்பு ஞானபிரகாசம் ராஜா மரியானுக்கு, தனது பாலைவன வாழ்க்கைக்கு விடுதலையை தந்துள்ளது. ஞானபிரகாசம் ராஜா மரியான், யாருக்கும் தெரியாமல் தப்பி வந்து சவுதி அரேபியா போலீசாரிடம் சரணடைந்தார். அவர்கள் விவரங்களை பெற்றுக்கொண்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஞானபிரகாசத்தை ஒப்படைத்தனர். அவரது கைரேகை மற்றும் பழைய பாஸ்போர்ட் விவரங்களை வைத்து அவரை இந்திய தூதரக அதிகாரிகள் யார் என்பதை உறுதி செய்தனர்.

இதைதொடர்ந்து இந்திய தூதரகத்தின் உதவியால் ஞானப்பிரகாசம் ராஜா மரியான் தனது சொந்த ஊருக்கு திரும்புகிறார். ஞானப்பிரகாசம் ராஜா மரியான் இதுபற்றி கூறியதாவது:–

குடும்ப சூழல் காரணமாக சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு வந்தேன். நான் வரும்போது எனது 4 மகள்களும் சிறு குழந்தைகளாக இருந்தார்கள். தற்போது அவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்து, அவர்கள் நான் பார்த்த மகள்கள் போல உள்ளார்கள். கடைசியாக தொலைபேசியில் என் மனைவியிடம் கடந்த 2015–ம் ஆண்டு பேசினேன்.

அப்போது அவர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு அவரும் இறந்துவிட்டார். தற்போது நான் என் வாழ்நாளில் பாதியை இந்த பாலைவனத்திலேயே கழித்து விட்டேன். இத்தனை ஆண்டுகள் கழித்து நான் என் சொந்த ஊருக்கு செல்ல உள்ளேன். எனது குடும்பத்தாரை சந்திக்க உள்ளேன். நான் போலீசில் சரணடைய ஹைல் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் சர்புதீன் தையில் என்பவர் எனக்கு உதவினார். அவருக்கும், இந்திய தூதரகத்துக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் அகமது ஜாவித் நடவடிக்கையின் காரணமாக ஞானப்பிரகாசம் ராஜா மரியானைப்போல் சட்ட விரோதமாக பல்வேறு பகுதிகளில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்த 26 ஆயிரத்து 713 இந்தியர்களுக்கு அவசரகால பயண ஏற்பாடுகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

தற்போது இவர்களில் 25 ஆயிரத்து 894 பேருக்கு இந்தியா செல்ல அவசரகால பயண அனுமதி தரப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதில் 2,022 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாவர்.

Post a Comment

Previous News Next News