சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அதன்படி அம்மாண்டிவிளையில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த கடைமூடப்பட்டது.
ஆனால், அம்மாண்டிவிளை சந்திப்பில் இருந்து திருநயினார்குறிச்சி சாலையில் இருந்த ஒரு டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதை அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதிகாரிகள் அந்த கடையை அகற்ற முன்வரவில்லை.
இதையடுத்து நேற்று பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கடை முன் திரண்டு கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடை அகற்றப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:
Surrounded Area