தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்தவர் விமல்(வயது22). குளச்சலை சேர்ந்தவர்கள் டைட்டஸ்(21), வினோ(25). இவர்கள் 3 பேரும், நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப் படகில் மீன் பிடிக்க செல்ல தயாராகி கொண்டிருந்தனர். இவர்களது படகில் ஐஸ் கட்டிகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சிலர் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் 3 பேரும் அருகில் உள்ள ஒரு பாறையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது விமலுக்கு செல்போன் அழைப்பு வந்ததால் அவர், போனில் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில், திடீரென்று எழுந்து வந்த ராட்சத அலை அந்த பாறையின் மீது மோதியது. பின்னர் அந்த அலை பாறையில் நின்று கொண்டிருந்த விமலை கடலுக்குள் இழுத்து சென்றது. அப்போது உடன் நின்ற வினோ கடலில் குதித்து விமலை, காப்பாற்ற முயன்றார். அதற்குள் விமல் கடலுக்குள் மாயமாகி விட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மற்ற மீனவர்கள் கடலில் மூழ்கிய விமலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும், மீனவரும் தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று காலையில், 2–வது நாளாக தேடும் பணி நடந்தது. அப்போது விமல் உடல், அப்பகுதியில் உள்ள பாறை அருகே மிதந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கடற்கரையில் திரண்டு நின்ற விமலின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த தகவல் கிடைத்ததும் குளச்சல் கடலோர பாதுகாப்பு படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜாண்கிங்ஸ்லி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:
Surrounded Area