குளச்சலில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதல்: என்ஜினீயரிங் மாணவர் பலி

03-12-2016
குளச்சலை அடுத்த கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் லதீஸ். மீனவர். கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

லதீஸ் தற்போது குளச்சலை அடுத்த களிமார் பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.இவரது மகன் ஜெனிஸ் என்ற சஞ்சு (வயது 19). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மரைன் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
இன்றும் நாளையும் ஜெனிசுக்கு விடுமுறை. எனவே அவர் பெற்றோரை பார்க்க நேற்று மாலை சென்னையில் இருந்து ஊருக்கு புறப்பட்டார்.

இன்று காலை நாகர்கோவில் வந்து சேர்ந்த ஜெனிசை அழைத்து வர அவரது நண்பர் ரமீஸ் நாகர்கோவில் சென்றார். அங்கிருந்து அவர் ஜெனிசை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் குளச்சல் நோக்கி வந்தார்.

இன்று காலை இருவரும் குளச்சல் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற தனியார் கல்லூரி பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஜெனிஸ், அவரது நண்பர் ரமீஸ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஜெனிஸ், லாரியில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரமீஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே விபத்து பற்றி அப்பகுதி மக்கள் குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து ஜெனிசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதற்குள், மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி, தப்பி சென்று விட்டது. அந்த வாகனம் எது? விபத்து நடந்தது எப்படி? என்பது பற்றி போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விபரம் சேகரித்தனர்.

மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே சென்னையில் இருந்து ஊர் திரும்பிய மகன் விபத்தில் பலியான தகவல் அறிந்து ஜெனிசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

அவர்கள் ஜெனிசின் உயிரற்ற உடலை பார்த்து கதறி அழுதனர். இது அருகில் இருந்தவர்களின் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்தது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Post a Comment

Previous News Next News