குளச்சல் இனயம் வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து படகுகளில் கருப்பு கொடிகட்டி போராட்டம்
குளச்சல் இனயம் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து படகுகளில் கருப்பு கொடிகட்டி தேங்காப்பட்டணத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் வழியாக மீனவர்களின் கண்டன பேரணி நடந்தது. பின்னர், கன்னியாகுமரியில் பூம்புகார் படகுதுறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டம் குளச்சல் இனயம் கடற்கரையில் சர்வதேச சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நிதிஒதுக்கீடு செய்துள்ளது. இங்கு வர்த்தக துறைமுகம் அமைந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இருப்பிடங்களை இழக்க நேரிடும் என்றும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
எனவே, வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம், கடைஅடைப்பு, கருப்பு கொடி கட்டுதல் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக, கடற்கரை கிராமங்களான மிடாலம், மேல்மிடாலம், ஹெலன் நகர், இனயம், ராமன்துறை, குறும்பனை, குளச்சல் பகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் கருங்கல் அருகே தேவிகோடு பகுதியில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தேங்காப்பட்டணத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் வழியாக படகுகளில் கருப்பு கொடிகட்டி கண்டன பேரணி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சி தேங்காப்பட்டணத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் அருட்பணியாளர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரணியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரடி, தேசிய மீனவர் சங்க மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன், தமிழ்நாடு மீனவ பேரவை குமரி மாவட்ட தலைவர் குமரி ஜோர்தான் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
பேரணி, தேங்காப்பட்டணத்தில் இருந்து தொடங்கி இனயம், குளச்சல், முட்டம், மணக்குடி, வழியாக மதியம் 12 மணியளவில் கன்னியாகுமரியை சென்றடைந்தது.
பேரணியாக சென்றவர்கள் கன்னியாகுமரியில், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள கடல்பகுதியில் குவிந்தனர். தொடர்ந்து, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் கடலுக்குள் படகுகளில் நின்ற நிலையில் ஒலிப்பெருக்கி மூலம் தங்களின் கோரிக்கையை விளக்கி பேசினர். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் வந்து குவிந்ததால், விவேகானந்தர் மண்டபத்துக்கான படகு போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் தடைப்பட்டது.
இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து படகுகளில் திரும்பி சென்றனர்.
இதன்பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுபோக்குவரத்து நடந்தது. இந்த பேரணி மற்றும் முற்றுகை போராட்டத்தில் குளச்சல் நகரசபை முன்னாள் தலைவர் ஜேசையா, சர்ச்சில், தி.மு.க. மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் வலம்புரிஜாண், பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், சிபிள், யூஜின் மற்றும் இனயம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மீனவகிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்